ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு?
‘நீட்’ தேர்வு அடுத்த ஆண்டு முதல் ஒருமுறைக்கு பதிலாக 2 முறை நடத்தப்படும் என கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது.
பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் இந்த தேர்வு நடத்தப்படும் எனக்கூறிய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், இந்த தேர்வுடன் என்ஜினீயரிங் படிப்புக்கான நுழைவுத்தேர்வும் நடத்தப்படும் என்றும் கூறினார். இந்த தேர்வுகள் முற்றிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனவும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய திறனாய்வு நிறுவனம், இந்த தேர்வுகளை நடத்தும் எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த இருமுறை வாய்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த நடவடிக்கைக்கு சுகாதார அமைச்சகம் அதிருப்தி தெரிவித்து உள்ளது. நீட் தேர்வை இருமுறை நடத்துவதால், இந்த தேர்வு கால அட்டவணை மாணவர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கும் என மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.
மேலும் ஆன்லைனில் தேர்வு நடத்துவதால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் எனவும் சுகாதார அமைச்சகம் தனது கடிதத்தில் கவலை வெளியிட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து ‘நீட்’ தேர்வை ஆண்டுக்கு இருமுறை என்பதற்கு பதிலாக ஒருமுறையே நடத்துவது குறித்து மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பரிசீலனை செய்ய முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. எனினும் இதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.