நண்பனை கொன்ற தீவிரவாதிகளை பழிவாங்க சவுதி வேலையை உதறிவிட்டு வந்த 50 நண்பர்கள்
காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள மெந்தார் எனும் கிராமத்தை சேர்ந்த அவுரங்கசீப், ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஜூன் மாதம் ரமலான் கொண்டாட்டத்திற்காக விடுமுறையில் சொந்த ஊர் வந்த போது, கடத்தப்பட்டார். உறவினர்கள், போலீசார் தேடி வந்த நிலையில், கடந்த ஜூன் 14ம் தேதி 10 கி.மீ தொலைவில் சடலமாக மீட்கப்பட்டார். தலையிலும், கழுத்திலும் குண்டுகள் பாய்ந்த நிலையில் கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்தார்.
இதனால் அவுரங்கசீப்பின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்நிலையில் நண்பரின் மரணத்திற்கு காரணமான தீவிரவாதிகளை பழிவாங்குவதற்காக சவுதி வேலையை ராஜினாமா செய்து விட்டு 50 பேர் சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
அவர்கள் கூறுகையில், அவுரங்கசீப்பின் மரணம் எங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, அதற்கு காரணமானவர்களை பழிவாங்க ராணுவம் மற்றும் போலீசில் சேர உள்ளோம், ஒரே நாளில் இதை செய்ய முடியாது என்றாலும் சமாளிப்போம். எங்களது ஒரே குறி அவர்களை பழிவாங்குவதே என தெரிவித்துள்ளனர்.