நிரவ் மோடியை நாடு கடத்த இங்கிலாந்திடம் கோரிக்கை: மத்திய அரசு கடிதம் அனுப்பியது
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார். அவர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனவே அவரை கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு இங்கிலாந்து அரசை மத்திய அரசு முறைப்படி கேட்டுக்கொண்டு உள்ளது. இந்த தகவலை வெளியுறவு இணை மந்திரி வி.கே.சிங் நேற்று மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
நிரவ் மோடியை ஒப்படைப்பதற்கான சிறப்பு கடிதத்தை லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அனுப்பி வைத்துள்ள மத்திய அரசு, அதை இங்கிலாந்து அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு தூதரக அதிகாரிகளிடம் அறிவுறுத்தியதாக அவர் கூறினார்.