கஜா புயல் தமிழகத்தின் கடலூர்-ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும்
அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இருப்பதாகவும், அது புயலாக மாற இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்து இருந்தது.
வங்க கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து 2 அல்லது 3 நாட்களில் தமிழக கடற்கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயலானது சென்னைக்கு கிழக்கே 930 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு உள்ளது.
இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், கஜா புயலால் வட கடலோர மாவட்டங்களில் 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். தீவிர புயலாக மாறினாலும் இது கரையை கடக்கும்பொழுது தீவிரம் குறைந்த புயலாக மாறும்.
தமிழகத்தின் கடலூர்-ஸ்ரீஹரிகோட்டா இடையே புயல் கரையை கடக்கும். கஜா புயலால் 14, 15ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வட தமிழகத்தில் மித மற்றும் கனமழை பெய்ய கூடும். நவம்பர் 15ல் அநேக இடங்களில் மித மழை, ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய கூடும்.
அதனால் நவம்பர் 12ந்தேதி முதல் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்கள் 12ந்தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.