கருங்கல் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் சாவு டிரான்ஸ்பார்மரில் உடல் தொங்கிய பரிதாபம்
குமரி மாவட்டம் கருங்கல் அருகே நட்டாலம் முகவிளை பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் (வயது 41). இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ராபர்ட் கருங்கல் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலை கருங்கல் சுற்று வட்டார பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
மழை மற்றும் காற்று காரணமாக சுண்டவிளை பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அப்பகுதி மக்கள் ராபர்ட்டிடம் புகார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ராபர்ட் பழுது நீக்குவதற்காக அந்த டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பை துண்டித்து விட்டு ஏறினார்.
ஆனால், மின் இணைப்பு சரியாக துண்டிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதை அறியாத ராபர்ட், டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்க முயன்ற போது, திடீரென மின்சாரம் அவரை தாக்கியது. இதில் அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். மேலும் அவரது உடல் டிரான்ஸ்பார்மரில் தொங்கியபடி இருந்தது. இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக கருங்கல் மின்வாரிய அலுவலகத்துக்கும், கருங்கல் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து ராபர்ட்டின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி ஊழியர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.