தொழில் முனைவோர் மானியத்துடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம் குமரி மாவட்ட கலெக்டர் தகவல்
தமிழ்நாடு அரசின் தொழில் வணிகத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட தொழில் மையம், தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கூடிய பல்வேறு கடனுதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழிலுக்கு அதிக பட்சமாக ரூ.10 லட்சம் முதலீட்டிலும், சேவை தொழிலுக்கு ரூ.3 லட்சம் முதலீட்டிலும், வியாபார தொழில்களுக்கு ரூ.1 லட்சமும், அரசு மானியமாக 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.1.25 லட்சமும் பெறமுடியும். இத்திட்டத்தின் கீழ் தமிழக அரசால் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 150 பயனாளிகளுக்கு ரூ.90 லட்சம் மானியத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி குறைந்தபட்ச கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 35-ஆகவும், சிறப்பு பிரிவினருக்கு 45-ஆகவும் (பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊக்குவிப்பு முகாம்
விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான தகவல்கள் வழங்கும் ஊக்குவிப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 14-ந் தேதி (புதன்கிழமை) திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மற்றும் 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது.
விருப்பமுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற தங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வித் தகுதிச்சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை இல்லாதவர்கள் அந்தந்த தாசில்தாரிடம் பெறப்பட்ட இருப்பிட சான்றிதழ், சாதிச்சான்றிதழ், எந்திரத்திற்கான விலைப்புள்ளி ஆகிய ஆவணங்களின் அசல் மற்றும் 2 நகல்களுடன் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.