உலகை உலுக்கும் 'மோமோ' சவால் விளையாட்டு
உலகம் முழுவதும் கடந்த ஆண்டு வைரலான குழந்தைகள் மற்றும் இளம் வயதினரை தற்கொலை செய்துகொள்ள தூண்டிய நீல திமிங்கல விளையாட்டு போல் சமீபத்தில் 'கிக்கி' சவால் பிரபலமானது. தற்போது மேலும் உலகம் முழுவதும் 'மோமோ' சவால் பிரபலமாகி வருகிறது.
நீல திமிங்கலம் விளையாட்டு ரஷ்யாவிலிருந்து துவங்கினாலும் விரைவிலேயே சமூக வலைதளம் வாயிலாக உலகம் முழுவதும் பரவியது. 'மோமோ''' வாட்ஸ்அப் வாயிலாக ஜப்பானில் இருந்து பரவத் தொடங்கினாலும் குழந்தைகளுக்கான விளையாட்டான மைன்கிராஃப்ட் மூலமாக அதிகளவு கவனம் பெற்றுள்ளது.
மோமோ சவாலானது தற்போது அமெரிக்காவிலிருந்து பிரான்ஸ் வரை, அர்ஜென்டினாவில் இருந்து நேபாளம் வரை உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஸ்பெயினில் ''சமூக ஊடகங்களில் உருவெடுத்துவரும் இது போன்ற ஆபத்தான சவால்களை மக்கள் தவிர்க்க வேண்டும்'' என அந்நாட்டு காவல்துறை மக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.
மெக்சிகோவின் பாணியில் ஸ்பெயின் காவல்துறையும் டுவிட்டரில் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த சவாலில் பங்கெடுப்பதை கைவிடுங்கள் என பிரசாரம் செய்து வருகிறது.
#PasaDeChorradas எனும் ஹேஷ்டேகை பயன்படுத்தி இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. முட்டாள்தனத்தை புறக்கணியுங்கள் #IgnoreNonsense என்பதே இந்த ஹேஷ்டேகின் பொருள்.
மோமோ சவால் விளையாட்டால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி அர்ஜென்டினாவில் தற்கொலை செய்து கொண்டாள். இந்த விளையாட்டில் ஈடுபட்ட சிறுமியின் முழுவிவரம் குறித்தும் அர்ஜென்டினா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சவால் எங்கிருந்து துவங்கியது என்பதைச் சொல்வது மிகவும் சவாலான விஷயமாக இருக்கிறது. ஆனால் இந்த மோமோ என அறியப்படும் அந்த புகைப்படம் ஜப்பானில் இருந்து வந்திருக்கிறது.
கடந்த 2016ல் ஜப்பான் டோக்கியோ நகரில் வெண்ணிலா கேலரியில் நடந்த கண்காட்சியில், ஒரு பொம்மை உருவம் வைக்கப்பட்டது. இந்த முகம் பேய் பிசாசு போன்று சித்தரிக்கும் வகையில் அவலட்சணம் கொண்டது. வெள்ளை தோலுடன் வீங்கிய கண்களுடன் கொடூரமாக சிரிக்கும் வகையில் உள்ள உருவத்திற்கு பெயர் தான் மோமோ. இவள் நம் மனநிலையை பாதிக்கும் தன்மை கொண்டவள்.
விசித்திரமான மற்றும் அவலட்சணமான சிலை, ஓவியம், புகைப்படங்கள் போன்றவைகளின் சேகரிப்புகளை வெண்ணிலா கேலரி விரும்புகிறது.இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த பேய்கள், ஆவிகள் குறித்த கண்காட்சியில் அனைவரையும் ஈர்க்கும் ஒன்றாக 'மோமோ' இருந்தது குறிப்பிடத்தக்கது.
மோமோ சவால் ஆனது பேஸ்புக், வாட்ஸ் ஆப், மெஸ்சேஞ்சர், டிவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களிலும் மோமோ சவால்கள் வருவதாக ஏராளமானோர் தெரிவித்து வருகின்றனர். மோமோவுடன் விளையாடுவதால், உங்களின் தனிப்பட்ட தகவல்களை திருடப்படும் அபாயம். வன்முறை மற்றும் தற்கொலை செய்ய தூண்டும். பணம் பறிப்பும் செய்யும். மன அழுத்தம், பதட்டம் மற்றும் இன்சோம்னியா என்று தூக்கமின்மை நோய் உள்ளிட்ட உடல் ரீதியாகவும் பாதிக்க கூடும்.
இந்தியாவில் புளுவேல் விளையாட்டால் டெல்லி, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இளைஞர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அந்த விளையாட்டிற்கு அமையாகி தற்கொலை செய்து கொண்டனர். தற்போது, இந்தியாவுக்கும் 'மோமோ' சவால் விளையாட்டு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தலாம். அதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.